Saturday, December 20, 2014

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (6)

ஆண்டாள்  காட்டும் அருட்பாதை (6)
பாசுரம் (6)


புள்ளும் சிலம்பின்காண் :புள்ளரையன் கோயிலில் 
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு 
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி 
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை 
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் 
மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம் 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் 

சிலம்பு என்றால் மணிகள் கோர்க்கப்பட்ட காலில் அணியும் ஓர் அணிகலன்.
அந்த மணிகளுக்குள் உள்ளே உள்ள பரல்கள் ஓசைகளை ஏற்படுத்தும். சிலம்பில் உள்ள அத்தனை மணிகளும் சேர்ந்து எழுப்பும் ஓசையை கேட்பதே ஒரே இனிமை.

அதுபோல் புள் ,பல பறவைகள் வேறு வேறு விதமான ஒலிகளை எழுப்புவதுவதை கேட்பதும் ஒரு இன்பம். அதிகாலையில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொருவிதமான ஒலிகளை எழுப்புவதை புள்ளும்   சிலம்பினகாண்  என்று  குறிப்பிடுகிறாள். ஆண்டாள்.

புள் அதாவது உயிர் என்ற பறவை ,அரையன் என்றால் இந்த உடலில் உள்ளம்  என்னும் அறையில் இருப்பவன் ,அவனின் இதயத்தில் இருப்பவன் இறைவன் ,அவன் நாத வடிவானவன். அவன் நம்மை விழிப்புடன் எப்போதும் அதாவது உயிருடன் இருக்குமாறு  இதயத்தை துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறானே அந்த ஒலி   உனக்கு கேட்கவில்லையா, அல்லது கேட்டும் நீ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே  ,விழித்துக்கொள் என்கிறாள் ஆண்டாள்.

நாம் பகவானை மறந்து உறங்கினாலும்
அவன் நம்மை அவ்வாறு உறங்க விடுவதில்லை

நம்மை சுற்றியுள்ள அவனின் கணக்கற்ற
படைப்புக்கள் நம்மை அவனை நினைக்கும்படி
தூண்டிக்கொண்டிருக்கின்றன

அதைத்தான்  ஆண்டாள் நமக்கு சுட்டிக் காட்டுகிறாள்
இந்த ஆறாவது பாசுரத்தில்.

ஆறாவது பாசுரத்தை பொருளுணர்ந்து படித்தோமானால்
ஆரா அமுதனின் அழகை தரிசிக்கும் எண்ணம் நிச்சயமாகத் தோன்றும்.

பறவைகள் அதிகாலையிலேயே விழித்துக் கொள்கின்றன
விழித்துக்கொண்டாலும்  அவைகள் ஆதவன் உதயம் ஆன  பிறகுதான்
இரை தேடச் செல்கின்றன.

அதுவும் பறவைக்குஞ்சுகள் அதிகாலை மூன்று மணியிலிருந்தே
தொடர்ந்து குரலை எழுப்ப தொடங்கிவிடும்.புறத்தில் உலகில் உள்ள பறவைகள் ஒலி  எழுப்பி இறை நாமத்தை
உச்சரிக்கின்றன. ஆனால் நம்முடைய உடலிலே உயிர் என்ற புள்
இறைவனை நினையாது உறங்கி கிடக்கிறது .அதுவும் இறைவன் எங்கோ இல்லை. அருகே இதயத்தில் நமக்காக உறங்காமல் நம் வருகைக்காக
காத்திருக்கின்றான் கமலக்கண்ணன் .
நாம் காலையில் எழும்போதே அவன் நாமங்களை உச்சரித்துக்கொண்டே
எழுந்தால் நமக்கும் புத்துணர்ச்சி .பகவானுக்கும் மகிழ்ச்சி .

அகத்தே உள்ள பகவான் புறத்தே கண்ணனாய் ஆயர்பாடியில் அவதரித்தான்
எண்ணற்ற லீலைகளை செய்தான் .மீண்டும் வைகுண்டம் சென்று விட்டான்.சென்றாலும் அவன் நம்மை மறக்கவில்லை .கோயிலில் அவன் வடிவத்தை சிலையாய் நிறுத்திவிட்டான் எல்லா யுகங்களிலும் அவனை பணிந்து மகிழ

.பக்தர்களை தன் கையில் தாங்கியுள்ள வெள்ளை நிற சங்கினை ஊதி அவன் சன்னதிக்கு வருமாறு அழைக்கின்றான். ஆண்டாளின் காதில் கேட்கிறது அந்த
சத்தம். ஏனென்றால் அவள் கண்ணன் நினைவாகவே இருக்கிறாள்
நாமும் அவன் நினைவாகவே இருந்தால் நமக்கும் அந்த ஒலி  கேட்கும் சத்தியமாக.

அடுத்து அவன் பூதனை என்ற அரக்கி அளித்த நஞ்சை உண்டு அவளை அழித்த கதையை ஆண்டாள்  நினைவுபடுத்துகிறாள் .இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் ஒரு தாய் தன்  குழந்தைக்கு பால் அளிக்கும்போது நல்ல
மன நிலையில் இருக்கவேண்டும். அன்பு, பாசம் போன்ற நல்ல குணங்கள் நிறைந்திருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பால் அமிர்தமாக இருக்கும்
குழந்தையின் நலம் காக்கக்படும்.

மனதில் தீய, நச்சு  எண்ணங்கள் நிறைந்திருந்தால் ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பால் நஞ்சாக தான் இருக்கும், பயம், காமம், வெறுப்பு, வஞ்சகம் போன்ற தீய எண்ணங்களும் குழந்தையின் மனநிலையை கண்டிப்பாக பாதிக்கும் எனபது உண்மை

அது குழந்தையின் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் கேட்டினை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதுதான் பூதனை கதையின் சாராம்சம்.
எனவே தாய்மார்கள் அனைவரும் இந்த உண்மையை எப்போதும்  நினைவில் கொள்ளவேண்டும்.

தீய எண்ணம் கொண்டவர்கள் நம்மிடையே தான் இருப்பார்கள். அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாது. அவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டுமேன்றால் நம் உள்ளத்தில் கள்ளம் புக அனுமதிக்காமல் கண்ணனின் கழலடிகளைப் பற்றிக்கொண்டால் சகடாசுரன் போன்ற கொடியவர்களை அழித்து ஆயர்பாடி  மக்களை காத்ததுபோல் கண்ணன்  நம்மை காப்பான்.

பால் போன்ற வெள்ளை உள்ளம் கொண்டவர்களின் இதயத்தில்  சயநித்திருப்பவனும், ஆகிய பரந்தாமனை தங்கள் உள்ளத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தமையால் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க  அவனை போற்றி துதிக்கிறார்கள் முனிவர்களும், யோகிகளும் அந்த ஒலி உன் காதில் விழவில்லையா என்று நம்மையெல்லாம் பார்த்து ஆண்டாள் கேட்கிறாள்.

அந்த நல்லதொரு சிந்தனையை நம் மனதில் கொண்டால் ஹரி என்னும் பேரொளி நம் உள்ளத்திலும் புகுந்து விவரிக்க முடியாத ஆனந்தத்தை அளிக்கும் என்கிறாள் ஆண்டாள்.

இந்த பாசுரத்தை பாடி தெய்வீக பரவச நிலையை அனைவரும் அடைவோமாக


2 comments: