Monday, May 22, 2017

உயிரும் ஆன்மாவும் வேறு வேறா?


உயிரும் ஆன்மாவும் வேறு வேறா?

ஆன்மா உடலில்
இருக்கும் போது  உயிர் எனப்படும்

உடலை விட்டு உயிர்நீங்கி விட்டால்
உடல் அழிந்துவிடும்

உயிர் தான் ஆன்மா என்பதை அறியும்வரை
 மறுபடி பிறந்து செத்துக்கொண்டிருக்கும்.
 புதிய உடல்களில் மீண்டும் மீண்டும்.

இந்தக்குழப்பம் உலகத்தில்
இன்பங்களை அனுபவிக்கும் மட்டும் வரை
யாருக்கும் தோன்றாது.

துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்கும்
எந்த பிரச்சினைகளுக்கும் எந்த தீர்வும்
புலப்படாமல் கவலைப்படுபவர்களுக்கும்
மேம்போக்காக ஏதோ  சில ஆன்மீக புத்தகங்களை படித்துவிட்டு அரைகுறையாக அவர்களுக்குள்ளே தானே
இது இப்படித்தான் இருக்கும் என்று
ஒரு தீர்மானத்தை செய்துகொண்டு
அதற்கு  விடை தேடி அலைபவர்களுக்கு
இந்த குழப்பம் தோன்றலாம்.

ஹிந்து மதத்தில் இதற்காக தெளிவான விடைகள் 
அளிக்கப்பட்டுள்ளன. 

அவைகளை படித்தாலும் கூட தெளிவு ஏற்படும் என்று
சொல்லமுடியாது.

அந்த தெளிவை அடைந்தவனிடம் சென்று நேரில் தெரிந்துகொண்டால்தான் உண்மை விளங்கும். 

எப்படி என்றால் திரைப்படத்தில் நெருப்பு பற்றி எரிந்தாலும் அது எப்படி தீப்பற்றாதோ  அல்லது சுடாதோ  அதுபோல்தான் புத்தக அறிவும். 

கீதையில் பகவான் கிருஷ்ணன் தெளிவாக ஆன்மாவை பற்றி
விளக்கி கூறியுள்ளார்.

அதை கண்ணதாசனும் கர்ணன் படத்தில்
 பாட்டாக நமக்கு அளித்துள்ளார்.

எல்லோருக்கும் இந்த பாடல் மனப்பாடம்.
சிலர் அதை தங்கள் வீடுகளிலும் கடைகளிலும்
தங்கள் எதிரே அட்டைகளில் அச்சடித்து மாட்டி
வைத்திருப்பதையும் நாம் காணலாம்.

அதை அவர்களோ அங்கு வருபவர்களோ படித்து
 தங்கள் மண்டையில் ஏற்றி
வைத்து புரிந்து கொண்டிருந்தால்
 எந்த குழப்பமும் வரப்போவதில்லை.

மண்டையில் உள்ள கோடிக்கணக்கான
விஷயங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

பரம்பொருளின் மற்றொரு பெயர்தான் ஆன்மா.

பரம்பொருள் என்றால் என்ன என்று கேள்வி கேட்டால்
உடனே பதில் சொல்லிவிடுவார்கள்.

அங்கிங்கெனாதபடி  எல்லா இடத்திலும் நீக்கமற
நிறைந்திருக்கும் பொருள் என்று.

அந்த பொருள் எப்படி இருக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது

ஆனால் அதற்கு  பல பெயர்களை நாமகரணம் சூட்டி,
 வடிவம் அளித்து அதுதான் அது என்று
தப்பு கணக்கு போட்டுக்கொண்டு காலத்தை கடத்தி காலன்  அழைக்கும்போது அவன் பின்னே மவுனமாக சென்றுவிடுகின்றோம்.

ஆனால் அதிலிருந்துதான்  எல்லாம் உருவாகின்றன. நம் கண்கள் முன் உலாவுகின்றன.

நம் கண் முன்பே மறைந்துவிடுகின்றன.

அதை காணும் நாமும்   மறைந்துபோகின்றோம்.

அது தனி தனி ஆன்மாவாக விரிவடையாமல் ஒட்டு மொத்தமாக இருக்கும்போது அதன் பெயர் பரமாத்மா

அதுவே அண்டங்களாகவும் பிண்டங்களாகவும்(உயிர்கள்) விரிவடைந்து
ஒவ்வொரு கூட்டுக்குள் புகுந்து கொள்ளும்போது ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது.

அதுபோலத்தான் ஒவ்வொரு உடலும்
அது மனிதராகட்டும்.அல்லது ஏதாவது உயிராகட்டும் அதன் உள்ளும் பரமாத்மாவின் சக்தி ஆத்மாவின் வடிவில் புகுந்துகொள்கிறது

அது எப்படி என்றால்/ எந்த மின்  சாதனத்திற்கும் அது இயங்க மின்சக்தி (பேட்டரி) தேவைப்படுவது போல்.


பாட்டரியில் உள்ள மின் சக்தி தீர்ந்தவுடன் அந்த மின் சாதனமும்(உடல்)பேட்டரி சக்தி இருந்த மின்கலமும் பயனற்று போய் விடுகின்றன.

பேட்டரியில் உள்ள சக்தி (ஜீவான்மா) எங்கிருந்து வந்ததோ அதனுடன்(பரமாத்மா) உடன் கலந்து விடுகிறது.

இதுதான் உண்மையான தத்துவம்.
இதை புரியவைக்கத்தான் பல மதங்களும் பல சாத்திரங்களும்.


உண்பது, உறவு கொள்வது, உறங்குவது விழிப்பது உழைப்பது, சண்டைபோடுவது  போன்ற செயல்கள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானவை.

இதை தாண்டி முறையாக தகுந்த வழிகாட்டுதலுடன்
சிந்தித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். 

2 comments:

 1. மிகவும் அருமையானதொரு அலசல்.

  சாப்பிடுவது, சாணி போடுவது, உறவு கொள்வது, உறங்குவது, விழிப்பது, உழைப்பது, சண்டை போடுவது, மண்டையை உடைத்துக்கொள்வது போன்ற செயல்கள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானவையே ஆயினும் ........

  பதிவு வெளியிடுவது அதற்குப் பின்னூட்டங்கள் எதிர்பார்ப்பது, பிறரின் பதிவுகளைப் படிப்பது அவற்றிற்கு பின்னூட்டம் அளிப்பது ஆகியவை நம்மைப்போன்ற சிலரால் மட்டுமே, அதுவும் சில சமயங்களில் மட்டுமே முடியக்கூடியவைகளாகும்.

  எனவே அண்ணா ..... நான் இங்கு இன்று வர நேர்ந்துள்ளது. நீங்களும் அங்கு என் பக்கம் வந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

  கடல் நீரும் பரமாத்மாவும் போன்ற அண்ணாவை, நீர்க்குமுழியும் ஜீவாத்மாவும் போன்ற நான் இன்று அடைய முயற்சித்துள்ளேன்.

  கடல்நீர் ஓர் அலையென வீசி தத்தளிக்கும் நீர்க்குமிழியை உடைத்து தன்னுள் ஐக்கியப் படுத்திக்கொள்வது போல அண்ணா அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டு முக்தி தருவாராக !

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  ReplyDelete
  Replies
  1. எந்த உறவும் நிரந்தரம் இல்லை
   எல்லா உறவுகளும் பிரிவதற்காகவே.
   அதுபோல்தான் நம்முடைய அண்ணன் தம்பி உறவும்
   இருந்தும் மனம் என்று ஒன்று நம்மிடம் இருப்பதால் பிரிந்த உறவுகள் மீண்டும் சேரும் பிரியும்.
   இப்படியே போய்க்கொண்டுஇருக்கும்.
   அந்த வகையில் தம்பி இவனுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி.
   நமக்கெல்லாம் உண்மையான உறவு நம்மை படைத்தவன்.ஒருவன்தான். அவனை நாடிதான் இவன் பயணம் போய்க்கொண்டிருக்கிறது.அதனால்தான் பதிவுகள் எழுதுவதில்லை.இருந்தாலும் மனதில் ஏதாவது எழுந்தாள் அது பதிவாக வெளிவரும்.பின்னூட்டங்களை எதிர்பார்த்து அல்ல.
   மவுத்தார்கண் இசை மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அது எப்போது நிற்குமோ யாம் அறியோம் பராபரமே.

   கடலில் இருக்கும் நீர்குமிழியில் இருக்கும் காற்று வெளியேறினால் தானே அது கடலில் கலந்துவிடும்.அதுபோல் நம்முள் இருக்கும் "நான்" என்னும்" அகந்தை வெளியேறிவிட்டால் நாம் கடவுளிடம் கலந்துவிடலாம். அதுவரை கடவுள் நம்மோடுதான் இருப்பார். ஆனால் நம்மால்தான் அவரை காணவோ அல்லது உணரவோ அல்லது அவரோடு கலக்கவோ இயலாது.

   பெயரில்லா ஆத்மா குடியிருக்கும் இந்த உடலிற்கு இந்த உலகம் பட்டாபிராமன் என்று பெயர் சூட்டப்பட்ட ஜீவன்

   Delete