Friday, September 21, 2018

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !



ஐம்பூதத்தால் அமைந்த  அணுக்களின்
கோட்டையில் உடலினுள் ஆனந்தமாய்
என் இதயத்தில் வீற்றிருக்கின்றாய்
என் அழகிய சிங்கமே

உன் அன்பென்னும் விழி பார்வையால்
என்றென்றும் ஆனந்தம் அடைய செய்வாய்

என்றும் வற்றாத ஸ்ரீநிதியை
உன்னோடு கொண்டவனே
காட்டாற்று வெள்ளம்போல் வந்து
மறையும் நிலையில்லா இவ்வுலக
பொருட்களின் மீதான மோகத்தை
நீக்கி  அருளுவாய்

தூணுக்குள் மறைந்து நின்ற மாயவா !
என் ஊனுக்குள்ளும் மறைந்து நிற்கும்
மாயம் செய்யும் தூயவா

துவாரகையில் யாதவர்கள் கண்டு
மகிழ அன்று கண்ணனாய் தோன்றினாய்

நவ துவாரங்கள் கொண்ட என் உடலின்
உள்ளே உன்னை காண இக்கணமே  அருளுவாய்

விண்ணும் மண்ணும் அளந்த வித்தகா
இவன் இந்த மண்ணுக்குள் செல்லுமுன்
விரைவில் தோன்றி எனக்கு விடுதலை
தருவாய் முகுந்தா

கல்லிலும் முள்ளிலும் உன்னை தேடும்
என் மனம் கள்ளமில்லா இதயத்தில் தானே
நீ வந்தமர்வாய் கோவிந்தா என்பதை
இன்னும் உணர்ந்தேனில்லை

அகிலத்தையெல்லாம் நீ ஒருவனே இயக்கும்போது
அதை அறியாத  தேவர்கள் கூட்டம் தானே
அனைத்திற்கும் காரணம் என்று
தலைக் கனம் கொண்டலைகின்றனர் இன்றும்

அனைத்தும் உன் உடைமையாய்  இருக்க
எல்லாம் தனதென்று அகந்தை கொண்டலைகிறது
அரக்கர் கூட்டம் அகிலமெங்கும்

தேவரும் அரக்கரும் எண்ணங்கள் வடிவில்
என் அகத்தில் அமர்ந்துகொண்டு உன்னை
எண்ணவிடாமல் செய்துகொண்டு என்னை
ஆட்டிப் படைப்பதை நீ அறிந்திருந்தும் நீ
இன்னும் அவர்களை விரட்டியடிக்காமல்
வாளாவிருப்பதேனோ?

என் உள்ளத்தின் உள்ளே நித்திரை கொண்டுள்ள
நிமலனே ,
பாலாழியில் பள்ளி கொண்டுள்ள
பரந்தாமனே
பதம் பணிந்து உன்னை நாடுகின்றேன்
என் ஜீவன் என்னை விட்டு ஓடிவிடுவதற்குள்
என்னை அவர்களிடமிருந்து விடுவிப்பாயாக

No comments:

Post a Comment