இராமா நீ சொல்!
இடர் கெடுக்கும் தெய்வம்
நீ என் இதயத்துள்
உறைவதை உணர்ந்துகொண்டபின்
புறஉலகில் உன்னை தேடி இங்கும்
அங்கும் என்றாவது அலைந்தேனா சொல்?
காணும் அனைத்தும் நீதான் என்றெண்ணி
பழகிய என்னை இவன் நமக்கு உதவான்
என்றெண்ணி உன்னை உணரா இவ்வுலக மாந்தர்
எனக்கிழைத்த இன்னல்களை களைய உன்னை
நான் என்றாவது நாடினேனா சொல்?
தீயவர்களுக்கிடையே என்னை நீ பணி
செய்ய பணித்தபோதும் என் நிலை தவறி
என்றாவது அவர்களுடன் சேர்ந்துகொண்டு
தவறான வழியில் சென்றேனா சொல்?
அல்லும் பகலும் உன் நாமமதை
உள்ளத்தில் கொண்டு உள்ளத்தில் கள்ளமின்றி
என் கடமைகளை நான் எப்போதாவது
ஆற்ற தவறியதுண்டா சொல்?
அண்டியவரனைவருக்கும் நன்மையே புரிந்த
எனக்கு அந்த நன்மை பெற்றவர்கள் சுயநலம்
கொண்டு எனக்கு இழைத்த இன்னல்களை
என்றாவது மனதில் கொண்டேனா சொல்?
உன் அருளை தவிர வேறொன்றும்
உன்னிடம் யாசியாது பொன்னும்
பொருளும் வேண்டி உன்னிடம்
என்றாவது முறையிட்டேனா சொல்?
பிறர் பெற்ற புகழ் ,செல்வம் குறித்து
மனம் பொருமி என்றாவது உள்ளத்தில்
பொறாமை கொண்டு புலம்பி
திரிந்தேனா சொல்?
என் வினைப் பயனாய் வாழ்வில்
அலை அலையாய் துன்பம் வந்த போதும்
அடுத்தடுத்து இழப்புகள் வந்தபோதும்
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள்
என்று நான் உன்னை என்றாவது
நொந்துகொண்டேனா சொல்?
நீ அளித்ததை இன்பமுடன் ஏற்றேன்
நீ என்னிடமிருந்து எடுத்ததையும்
இன்பமுடன் ஏற்றேன்
நீ என்னுடன் எப்போதும் அகலாது
இருப்பாய் என்று எண்ணித்தான்.
இசைக்கு மயங்கும் இராமா
வசைக்கு ஆளாகிய இராமா
பக்தர்களின் சித்தமிசை
நடமிடும் இராமா
ஓசையின்றி இரவும் பகலும்
உன்னை நாடி
உன் அருள் வேண்டி
இங்கொரு ஜீவன்
காத்திருக்கிறது
என்பதை மறவாதே.
அருள் - உங்களால் எல்லோருக்கும் உண்டு...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :
http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html
//நீ அளித்ததை இன்பமுடன் ஏற்றேன்
ReplyDeleteநீ என்னிடமிருந்து எடுத்ததையும்
இன்பமுடன் ஏற்றேன்
நீ என்னுடன் எப்போதும் அகலாது
இருப்பாய் என்று எண்ணித்தான். //
நல்ல எண்ணங்கள். எண்ணம் அழகானால் எல்லாமே அழகாக அமையும் தான்.