Friday, February 21, 2014

அபிராமி அந்தாதி (17) (பாடல்(10)

அபிராமி அந்தாதி (17) (பாடல்(10)

அபிராமி அந்தாதி (10)


பாடல்:10

10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


இந்த பாடலை இப்படி வரிசைப்படுத்துவோம் 
அருளே.,
உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. 
ஒன்றும் எழுதாமறையின் அரும்பொருளே
அழியா முத்தி ஆனந்தமே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்

அருளே  வடிவானவள் அபிராமி. 
உமா என்றழைக்கப்படும் அவள் உ (உலகத்திற்கே) மா (மாதா )
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈன்றெடுத்த தாயாவாள். 

அவள் இவ்வுலகத்து மக்களின் 
துன்பங்களைப் போக்க பல அவதாரங்களை எடுத்தவள். 


ஒருமுறை இமவானின் மகளாகப் பிறந்து 
சிவபெருமானை நோக்கி தவம் செய்து அவனையே 
கணவனாக அடையப் பெற்றவள். 

வேதங்கள் எப்போது யாரால் 
இந்த உலகிற்கு வழங்கப்பட்டது 
என்பதை யாரும் அறிந்தாரில்லை. 

ஆனால் அவைகள் ஒலி அலைகளாக என்றும் 
ஆகாசத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. 

அதை தங்கள் தவத்தினால் கண்டுணர்ந்து 
நமக்கெல்லாம் வழங்கியவர்கள். பல ரிஷிகள். 

வேதங்களுக்கு எழுத்து வடிவம் கிடையாது. 
அது காலம்காலமாக செவி வழியாகக் 
கேட்டு மனனம் செய்து தலை தலைமுறையாக 
நமக்கு வந்துகொண்டிருக்கிறது. 

அப்படிப்பட்ட வேதங்களில் போற்றி புகழப்படும் 
அரும்பொருளே என்று அபிராமியை 
போற்றிப் புகழ்கிறார் பட்டர். 

இவ்வுலக ஆனந்தங்கள் எல்லாம் நிலையற்றவை. 
கணத்தில் தோன்றி மறைபவை. 
நிலையான ஆனந்தத்தை வழங்கும் தாயே ,

நீ அளிக்கும் அந்த ஆனந்தத்தை அடைந்தபின் பிறிதொரு ஆனந்தத்தை தேடி அலைய வேண்டிய 
அவசியமில்லாத முக்தியை அருள்பவளே 
என்று அன்னையை புகழ்கிறார். 

நான் நின்று கொண்டிருக்கும்போதும் , 
எதுவும் செய்யாமல் உட்கார்ந்துகொண்டிருக்கும்போதும் ,
படுத்துக் கிடக்கும்போதும், மற்றும் 
எந்த நிலையிலும் உன் பெருமைகளையே 
நினைத்து துதிக்கின்றேன் .

நான் எப்போதும் உன் மலர் போன்ற 
பாதங்களையே வணங்குகின்றேன். 
என்றென்றும் உன் அருளை நாடி. 
என்கிறார் அபிராமி  பட்டர். 

நாமும் நம் மனதில் ஆசைகளை தூண்டி 
நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் எண்ணங்களை 
விடுத்து அம்பிகையின் திருவடிகளையே சிந்திப்போம். 

1 comment:

  1. போற்றிப் புகழும் விளக்கம் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete