Tuesday, January 12, 2016

அடுத்த வர்களின் பசி தீர்ப்பது,


அடுத்த வர்களின் பசி தீர்ப்பது, பரமனுக்கே படைப்பதற்கு நிகராகும்

அன்பு இருந்தால், அகிலத்தை ஆள்வதுடன், ஆண்டவனையே நம்மை தேடி வர வைக்கலாம் என்பதற்கு, சேந்தனார் வரலாறே சான்று...
சிவ பக்தரான சேந்தனார், விறகு வெட்டி, அதை விற்று கிடைத்த காசில், உணவு சமைத்து, அடியார்களுக்கு உணவு இட்ட பின், தான் உண்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு நாள் கொட்டும் மழையிலும், கிடைத்த தானியத்தை வைத்து களி தயாரித்து, அடியாரை தேடிப் புறப்பட்டார் சேந்தனார். வயது முதிர்ந்த அடியார் ஒருவர் அகப்பட, அவரை அழைத்து வந்து, களியமுதை படைத்தார்.
மிகுந்த பசியுடன் வந்த முதியவரோ, வயிறு நிறைய சாப்பிட்டு, சிறிதளவு களியை மேல் துண்டில் கட்டி எடுத்துச் சென்றார். அதன்பின், மீதி இருந்ததை, சேந்தனாரும், அவர் மனைவி, மக்களும் உண்டனர்.
அதே நேரம், அரண்மனையில், சிவ பக்தியில் சிறந்தவரான செல்வச்சோழ மகாராஜா, தூக்கமின்றி தவித்தார். காரணம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், இரவு பூஜை முடிந்த பின் ஒலிக்கும் மணியோசை கேட்ட பின்னரே, உணவு உண்பது அவர் வழக்கம். அன்று, நள்ளிரவைத் தாண்டியும் மணியோசை கேட்கவில்லை.
இதனால், மன வருத்தம் அடைந்த மன்னர், சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் தூங்கி விட்டார். அப்போது அவர் கனவில், நடராஜப் பெருமான் காட்சியளித்து, 'மன்னா... என் அன்பன் எனக்கு களியமுது படைத்தான்; அதனாலே தாமதமானது...' என்று கூறி, மறைந்தார்.
பொழுது விடிந்ததும், தன் ஆசார அனுஷ்டானங்களை முடித்த மன்னர், 'இறைவனுக்கே உணவிட்ட அந்த அடியாரை நான் எப்படி தரிசிப்பது...' என்று நினைத்தபடி, சிதம்பரம் ஆலயத்தை அடைந்தார். அங்கே, திருவம்பலத்தில் முற்றம் முழுதும், களி சிதறி, இனிமையான மணம் வீசியது. 
அது எப்படி வந்தது என்று எல்லாரும் குழம்ப, சோழமன்னன், தன் கனவில் நடராஜப் பெருமான் கூறியதை சொல்லி, 'அந்த அடியார் தந்த களியே, இங்கு இறைவனால் சிதறப்பட்டுள்ளது...' என விவரித்தார்.
அச்சமயம், சிதம்பரத்தில், மார்கழி திருவாதிரை திருநாள் நடைப்பெற்றது. அன்று, வெகு விமரிசையாக நடக்க வேண்டிய தேரோட்டம், தேர் கிளம்பாததால் தடைபட்டது; என்ன முயன்றும் பலனில்லை. அப்போது, 'சேந்தா... தேர் நகர பல்லாண்டு பாடுக...' என்று வானில் அசரீரி கேட்டது.
கும்பலோடு கும்பலாக நின்றிருந்த சேந்தனார், பல்லாண்டு பாட, தேர் வடம் பிடிக்காமல் தானே ஓடியது. அனைவரும், சேந்தனாரின் தூய்மையான பக்தியையும், நடராஜப் பெருமானின் கருணையையும் வியந்து துதித்தனர்.
அவர் களிப்போடு களி படைத்த அந்த வைபவத்தை முன்னிட்டே, நாமும் திருவாதிரை களி செய்து, 'திருவாதிரைக்களி ஒருவாக் களி' எனக் கொண்டாடுகிறோம்.
தன் வீட்டிற்கு உணவுண்ண வந்தது, சிவபெருமான் என்பது, சேந்தனாருக்கு தெரியாது. அடுத்த வர்களின் பசி தீர்ப்பது, பரமனுக்கே படைப்பதற்கு நிகராகும் என்பதை நிரூபித்தவர் சேந்தனார். அவருக்கு அருள் புரிந்த ஆதிரையான், நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்! 

'Ramakrishnan K S' via Amritha Vahini




2 comments:

  1. மிக அருமையான பக்திக் கதை. நன்றி.

    ReplyDelete
  2. அதனால்தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றார்கள் ஆன்றோர்கள்

    இன்னும் ஒரு படி மேலே போய் மகான்கள் .
    அன்ன விசாரத்திர்க்குப் பிறகுதான் ஆத்மா பற்றிய
    விசாரம் வேண்டும் என்றார்கள்.

    உணவுதான் பிரம்மம் என்று உபநிஷதங்கள் கூறுகின்றன.

    சிவனுக்கே அன்னம் பாலிப்பதை தன் கொள்கையாக
    கொண்டு அகிலம் காக்கும் அன்னை அன்னபூரணியாக அருள்
    பாலிக்கின்றாள்

    ReplyDelete