Monday, February 25, 2013

குருவாயூரப்பனின் பக்தர்களுக்காக


குருவாயூரப்பனின் 
பக்தர்களுக்காக 

கண்ணன் என்னும்
மன்னன் பேரை
சொல்ல சொல்ல ......

ஆம் கண்ணன் என்னும் 
மன்னன் பேரை சொல்ல சொல்ல 

கல்லும் முள்ளும் பூவாய்
மாறும் மெல்ல மெல்ல 

ஆம் சத்தியமான வரிகள்.

அன்பின்றி காய்ந்து கல் போன்று
இறுகிப்போன நம் மனமும் 
அகந்தையினால் சினமுற்று ,
பொறாமையினால் வெறுப்புற்று,
அறியாமையினால் 
அவதியுற்று கிடக்கும் 
நம் மனம் கண்ணனின் பேரை 
சொல்ல சொல்ல 
 பூ போன்று மென்மையாய்
 மாறிவிடும் காலபோக்கில் 
அவன் கருணையினால் 

மகிழ்ச்சியின்றி 
மணமின்றி இருந்த
நம் வாழ்க்கை மணம் வீசும் 
மலராக மலர்ந்துவிடும். 

கண்ணா கருமை நிறக்கண்ணா
உன்னை காணாத கண்ணில்லையே  
என்ற பாடல் மிக பிரசித்தம் அந்நாளில் .

கண்ணனை அந்த மணிவண்ணனை 
அந்த ஆயர் குல திலகத்தை 
எந்த வடிவத்தில் கண்டாலும்
இன்பம் தருபவனல்லவோ அவன்

எப்பெயரிட்டு அழைத்தாலும்
எந்த உறவில் அவனை நினைந்து
பக்தி செய்தாலும் அப்படியே  
ஏற்று அருள் செய்பவனல்லவா அவன்

கண்ணனை ஒருமுறை 
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே 
என்று போற்றி புகழ்ந்தனர் 
அவன் அடியார்கள். 

பார்வையற்ற சூர்தாசர் 
கண்ணனை கண்டபின் 
தன்னை மீண்டும் குருடராகவே 
ஆக்கிவிடும்படிகண்ணனை 
வேண்டிக்கொண்டாராம்.

உன்னை கண்ட பின் 
நான் மீண்டும் இந்த உலக காட்சிகளை 
காண விரும்பவில்லை என்று

என்னே அவர் பக்தி. 
சூர் சாகர் என்னும் அவர் பாடல்கள் 
நெஞ்சை உருக்குபவை.
 நினைவில் வலம் வந்து 
கண்ணனின் வடிவத்தை
 நம் முன் நிறுத்துபவை.

கணக்கற்ற கிருஷ்ண பக்தர்கள்.
பெரியாழ்வார், கனகதாசர் ,
புரந்தரதாசர் மீரா, ஆண்டாள்,
நாராயண தீர்த்தர்,ஜெயதேவர்,  
நாராயண பட்டத்ரி,பூந்தானம்
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 
என  பட்டியல் நீண்டுகொண்டே போகும். 

கனகதாசர் பாடிய கிருஷ்ணா  நீ பேகனே பாரோ 
என்ற பாடலை பாடாதவர் உண்டோ!
என்ன  உருக்கம்  மனமுருகி பாடினால் 
அந்த கிருஷ்ணன் வராமல் எங்கு போவான்?

பாரோ கிருஷ்ணையா என்றபுரந்தரதாசர்.
பாடலை எம் எல் வசந்தகுமாரி 
அவர்கள் பாடி கேட்கேவேண்டும்.

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா 
என்று எம் எஸ்.அம்மா அவர்கள்  பாடி கேட்கவேண்டும்

திக்கு தெரியாத காட்டில் என்ற பாடலை 
ஜி. என். பாலசுப்ரமணியம் அவர்கள் பாடி கேட்கவேண்டும். 

பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடினால் 
அன்ன ஆகாரம் இன்றி அந்த மாய கண்ணின்
 பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 

இப்படி முடிவேயில்லை
முதலும் முடிவும் இல்லாத
நம்மை எல்லாம் ரட்சிக்க 
யாதவனாய்  வந்த மாதவனின்
 புகழை பாட, கேட்க,
 போதாது ஒரு பிறவி. 

எனக்கு சங்கீதம் தெரியாது.
ஆனால் ஈடுபாடு உண்டு 
பாட்டில்மெய் மறந்துபோவேன்.  
அந்த கண்ணன் அந்த பாக்கியத்தையாவது 
எனக்கு கொடுத்திருக்கிறானே 
என்றுநினைத்து கொள்வேன். 

ஜகத் மித்யா என்றார் ஆதி சங்கரர்
அந்த மித்யையை  போக்க வந்த
 ஜகத் குருவன்றோ 
கிருஷ்ண பரமாத்மா

கிருஷ்ண பக்தி செய்வதற்காக பிறவிகள் 
எடுத்துக்கொண்டே போகலாம். 
இப்படி பெருமை வாய்ந்த அந்த மனமோஹனை, 
மாயக்கண்ணனை நானும் அனுபவித்தேன். 

குருவாயுரப்பனை 1964 ஆம் ஆண்டு 
ஒருமுறை தரிசித்தேன்.
இன்றும் அது பசுமையாய் 
என் நெஞ்சில் இருக்கிறது.
அப்போது சாதாரண கிராமம் குருவாயூர்.
கொட்டும் மழையில் 
குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு 
அவன் கோயில் வாசலில் 
அதிகாலை குளிரில் 
நாராயண கோஷத்துடன் 
பக்தர் குழாத்துடன் அவனை 
தரிசனம் செய்தது எத்தனை 
பிறவியானாலும் மறக்காது.

மீண்டும் 2002ஆம் ஆண்டு குருவாயூருக்கு வந்தேன்.
சுற்றுலா தலமாகிவிட்டது. குருவாயூர்.
பழைய சாநித்தியம் அங்கு இல்லை
என்று தோன்றியது எனக்கு. 

ஒரு நிமிடம் கூட நின்று தரிசிக்க 
முடியாமல் துரத்துகிறார்கள் 
பலமணி நேரம் வரிசையில் நின்று
 கண்கள் துவண்டுபோன நிலையில் 
கோயிலின் கருவறையில் நெய் தீப ஒளியில் 
கண்ணனை நம் கண்ணுக்குள் 
கொண்டுவருவதற்குள் நாம்
 வெளிதள்ளப்படுகிறோம். 
அதனால் என்ன? 
அவன்தான் என்றோ 
என் உள்ளத்தில் குடிகொண்டு விட்டானே.
அவனை நான் எப்போது வேண்டுமானாலும் 
தரிசித்து ஆனந்தபட்டுகொள்வேன். 

1977அம் ஆண்டு சென்னை வானொலியில் 
திருச்சூர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கிய 
குருவாயூரப்பன் சுப்ரபாதம் கேட்டேன் 
அந்த வெண்கல குரல் என்னை 
மெய்மறக்க செய்துவிட்டது 
அதை அப்படியே காசெட்டில் பதிவு செய்தேன் 
தினம் தவறாமல் கேட்டேன். 
அந்த சுப்ரபாத புத்தகம் கிடைத்தால்
 நன்றாக இருக்கும் என்று அந்த 
குருவாயூரப்பனையே  பிரார்த்தித்தேன். 

என்ன அதிசயம் 
பழையபுத்தக கடையில்  அந்த புத்தகத்தை
என் வருகைக்காக என் கண்ணில் படும்படி
குருவாயுரப்பன் வைத்திருந்தான் 

மகிழ்சியுடன் வாங்கி வந்தேன். 
மன நெகிழ்ச்சியுடன்   பாராயணம் செய்தேன்
செய்துவருகிறேன் 37 ஆண்டுகளாய் 

இருந்தாலும் நான் அன்று வணங்கிய 
அந்த என் அப்பனின்கையில் வெண்ணையோடு 
வடிவத்தை மனதில் நினைந்து 
மெடல் பாயிலில் அவன் உருவம் 
வரைந்தேன் படம் பிடித்தேன்

அதிசயம் பாருங்கள் 
படத்தில் அவன் தன் வாயில் வழியும் 
வெண்ணையோடு காட்சி தந்திருக்கிறான் 
அந்த மாய கண்ணன் .

 (இன்னும் தொடரும்)







3 comments:

  1. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா - என்னை கட்டிப்போட்டு விடும்...

    ReplyDelete
    Replies
    1. அவன் நம்மை கட்டி போடுவது
      நம்மை கட்டுகளிலிருந்து விடுவிக்க
      என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

      Delete
  2. Dear Pattabhi,

    Very rarely devotion and poetry as ideally as in your case. Wonderful composition about Krishnan. As we see his divine image, we forget all the images of the world. As we recite his name, we become free from all fears, desires and attachments and become one with Him

    Krishnan

    Pattabi Raman
    9:28 AM (1 minute ago)

    to V.S.
    கிருஷ்ணன் என்ற திருநாமம் கொண்ட
    நீர் ஒருவர்தான் குருவாயூரப்பன் பக்தரோ?

    உங்களை போன்ற ஒரு பக்தன் போதும்
    எனக்கு நான் சலிக்காமல்
    சளைக்காமல் அவன் புகழை
    பாடிகொண்டிருப்பேன்.

    ReplyDelete