Friday, February 14, 2014

அபிராமி அந்தாதி (12) (பாடல்(5)

அபிராமி அந்தாதி (12) (பாடல்(5)



அபிராமி அந்தாதி (12)

அபிராமி அந்தாதி (12)



பாடல்:5: 

பொருந்திய முப்புரைசெப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணிவார் சடையோன் 
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகைஅம்புயமேல் 
திருந்திய சுந்தரிஅந்தரி-பாதம் என் சென்னியதே.

இந்த பாடலை கீழ்கண்டவாறு வரிசைபடுத்துவோம் 

பொருந்திய முப்புரை,
செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி,
வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை
அம்புயமேல் திருந்திய சுந்தரி
அந்தரி-பாதம் என் சென்னியதே.



அபிராமி முத்தொழில் செய்யும் 
மும்மூர்த்திகளை செயல்படுத்தும் 
சக்தியாக இருக்கின்றாள் 

திருஞானசம்பந்தர் போன்ற
தூய பக்தி செலுத்தும் கள்ளம்கபடமற்ற
பக்தர்களுக்கு அவளிடம் பால் அருந்தாமலேயே
தன்  கருணைப் பார்வையாலே
ஞானப் பால் அளிக்கும் 
தாயாகவும் இருக்கின்றாள்
 .


பக்தர்களுக்கு ஏதாவது துன்பம் வந்துவிடுவிடுமோ 
என்று எப்போதும் அஞ்சி அதிலிருந்து
அவர்களை காக்கும் கருணை உள்ளம்
கொண்டவளாக அபிராமி விளங்குகின்றாள் 

பரந்து  விரிந்த இந்த அண்டங்களை 
தன் சடையில் அடக்கிக்கொண்டு 
அங்கம் முழுவதும் நச்சரவங்களை அணிந்து 



ஆடல் செய்யும் ஆடல்வல்லான் அரவங்களின் 
தலையில் உள்ள நஞ்சை எடுத்து 
தன் கண்டத்தில் அடக்கிகொண்டான் 
இந்த கண்டத்தில் வாழும்
நம் போன்ற உயிர்களைக் காக்க 



ஈசன் மீது அபிமானம் கொண்ட 
அபிராமியோ அவன் உண்ட 
அந்த நஞ்சை அமுதமாக 
ஆக்கிவிட்டாள்

 

ஆக்கியதுமட்டுமல்லாமல் 
அவனை லிங்க உருவாக
ஆக்கி தன் இரு கரங்களினால் 
எரியும் விளக்கை அணையாமல்
காப்பதுபோல் காக்கின்றாள்.



எந்த பலனையும் எதிர்பாராது 
வணங்கும் நம் போன்ற அடியார்களையும்
அவ்வாறே காப்பாள் அபிராமி. . 

முக்காலமும்
முன்பே உணர்ந்தவள். 

அடியவர்களை எச்சரிக்கும் விதத்தில்
முன்பே குறிப்பால் உணர்த்துபவள்

நாம் உணராவிட்டாலும் நம் உள்ளிருந்து 
நம்மைக் காப்பவள். 

தாமரை மலர் மிகவும் அழகானது,
மென்மையானது 
அதில் உறையும் அபிராமியும்
அப்படிப்பட்டவளே 

பக்தர்களிடத்தில் 
இளகிய மனம் கொண்டவள்  

அழகே விஞ்சும் 
அழகைக் கொண்டவள் 

இவள் முடிவில்லாதவள் 
அதே நேரத்தில் அனைத்துக்கும் 
முடிவானவள். 

அப்படிப்பட்ட அன்னையின்  திருவடிகளை
எப்போதும்  என் தலை மேல் தாங்கி 
இதயத்தில் வைத்துப் பூசிப்பேன் 
என்கிறார் அபிராமி பட்டர். 

நாமும் அன்னையின் பெருமைகளையும்
அருமைகளையும் உணர்ந்து கொண்டு 
மற்ற சிந்தனைகளை ஒழித்து
நம் சிறுமைகள் நீங்க 
பொறுமையுடன் பக்தி செய்து
இவ்வுலக வாழ்வை இன்பமாக
ஆக்கிக்கொண்டு வாழ்வோமாக.

படங்கள்-நன்றி-கூகிள்  

2 comments:

  1. ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete