Tuesday, December 13, 2011

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

மனம் என்று ஒன்றிருக்கும்வரை
எண்ணங்கள் இருக்கும்
எண்ணங்கள் இருக்கும்வரை
செயல்கள் இருக்கும்
செயல்கள் இருக்கும்வரை
விளைவுகள் இருக்கும்
விளைவுகள் இருக்கும்வரை வாழ்க்கையில்
இன்ப துன்பங்கள் இருந்துகொண்டே இருக்கும்
இன்பதுன்பங்கள் இருக்கும்வரை
மனதில் அமைதி இருக்காது

நமக்கு இன்பமும் துன்பத்தை தருகிறது
துன்பமும் இன்பத்தை தருகிறது
இன்பமும் துன்பமும் நிலையானதாக இல்லை
இரண்டும் மாறி மாறி வந்து நம்மை
ஆட்டி வைக்கின்றன
இதனால் மனித உறவுகளில் உரசல்கள்,
விரிசல்கள் ஏற்படுகின்றன

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
அப்பாற்பட்ட ஒரு இன்பம் இருக்கிறது
அது எங்கே கிடைக்கும்?
அதை எப்படி அடைவது?
அந்த நிலையான இன்பத்தை நாடிதான்
ஒவ்வொரு மனித உயிரும் வாழ்நாள்
முழுவதும் அலைந்து கொண்டிருக்கின்றன
அதை நாம் அடையும் வரை
நம் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்

எதை தேடுவது?
எங்கே தேடுவது?
யாரிடம் தேடுவது?
எப்படி தேடுவது?
அந்த தேடலில்தான் எவ்வளவு குறுக்கீடுகள்
எவ்வளவு ஏமாற்றங்கள்
எவ்வளவு இழப்புக்கள்
புற உலகில் அதை தேடி அலைந்து
மனிதர்கள் வாழ்நாள் வீணாகிவிடுகிறது
உண்மையில் அது, அந்த நிலையானஇன்பம்
நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை அறியும்போதுதான்
நமக்கு உண்மை விளங்குகிறது
அப்போதுதான் நமக்குள் இருப்பதுதான்
அனைத்திற்குள்ளும் இருக்கிறது
என்ற அறிவு ஏற்படுகிறது
அப்போதுதான் இந்த உலகத்தின் மீதும்
அனைத்து உயிரினங்களின் மீதும்
உண்மையான அன்பு ஏற்படுகிறது

அன்பிருக்கும் இடத்தில எதிர்பார்ப்புகள் இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லாமையால் ஏமாற்றங்கள் இல்லை
ஏமாற்றம்  இல்லையேல் மன அழுத்தம் இல்லை
மனம் எப்போதும் அமைதி நிலையில் இருக்கிறது
இவ்வுலக வாழ்வே இனிக்கிறது
மரணத்திற்கு பிறகும் நம்மை தொடர்ந்து வரும்
உயிரின் உண்மை நிலை அதுவே
அதை அடைந்த பிறகு மனது அமைதியடைந்து
வேறு எதையும் நாடுவதில்லை

அந்நிலையை அடையும் வரைக்கும்
நாம் செய்யும் அனைத்து செயல்களிலும்
நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு
உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

நமக்கு இறைவன் அனைத்தையும் அளித்திருந்தாலும்
அனைத்தையும் அவன்தான் நம் உள்ளிருந்து  இயக்குகிறான்
என்ற தெளிவு வரும்வரை இந்த நான் என்ற எண்ணம்
நம்மை விட்டு நீங்க வாய்ப்பில்லை  

No comments:

Post a Comment