Wednesday, January 16, 2013

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்






இறைவன் உள்ளும் இருக்கிறான்
புறத்தேயும் இருக்கின்றான்
எல்லாமாகவும் இருக்கின்றான்.

அவனை விட்டு பிரிந்து வந்தோம் இவ்வுலகிற்கு 
ஆசைவயப்பட்டோம் அவனை மறந்தோம்.
அனுதினமும் சொல்லொணா துன்பங்களையும்
 நிலைக்காத இன்பங்களையும் 
அனுபவித்துகொண்டிருக்கிறோம் 

ஆனால் அவன் நம்மை மறக்கவில்லை
நம்முள்ளே நம்முடைய இதயத்தின் உள்ளே 
இருந்துகொண்டு நம்மை ஆட்டுவிக்கின்றான் 
நாம் ஆடுகிறோம். 

ஆனால் நாம் நம் மனதில்
நினைக்கின்றோம் நாமே ஆட்டம் போடுவதாக 
அகந்தை தலை தூக்க தலைவிரித்தாடுகிறோம். 

அவனும்தான் ஆடுகிறான் சிற்றம்பலத்திலும் 
பேரம்பலத்திலும் களிகூத்து இவ்வுலகம் உய்ய 
ஆடி ஓய்ந்த பின் தான் நமக்கு புரிகிறது 
நாம் ஆடவில்லை நம்மை ஒருவன் ஆட்டி வைக்கின்றான் என்று.

யார் அவன் என்று தேடுகிறோம் இவ்வுலகில் 
இவன் அவனாக இருப்பானோ அல்லது 
இவனில் அவன் இருப்பானோ அல்லது இந்த இடத்தில், 
இந்த வடிவத்தில் இருப்பானோ என்று

ஆனால் அனைவரும் அவனை எந்நேரமும் தேடுவதில்லை 
சில நேரம் தேடிவிட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விடுகின்றனர்.

சிலர் விடுவதில்லை .தேடிய பொருட்களில் அவன் வெளிப்படவில்லை 
இனி அவனை நம்முள்ளே தேடுவோம் என்று புறத்தை மறந்து அகத்தில் 
அவனை தேடுகிறார்கள். 

அகத்திலோ ஆயிரமாயிரம் எதிரிகள் 
அவனை தேட விடாமல் அவனை திசை திருப்புகிறார்கள்

இருந்தும் சிலர் விடாமுயற்சி செய்து பார்க்கிறார்கள். 
முடிவில் உள்ளிருக்கும் அவன் அருளின்றி அவனை 
காண முடியாது என்று உணருகிறார்கள். 

அனைத்தையும் துறந்து அவன் பாதங்களே கதி என்று 
சரணாகதி செய்தவுடன் அவன் காட்சி தருகிறான். 
தன் உண்மை வடிவை காட்டுகிறான். 
இதுவரை காணாத ஆனந்தத்தை அளிக்கிறான். 

பக்தன் பாடுகிறான் ஆடுகிறான். அவனைப்போலவே. ஆனந்த கூத்தாடுகிறான். 

சிலர் இறைவா இந்த ஆனந்தத்தோடு நான் உன்னிடம் வந்துவிடுகிறேன் என்கிறார்கள். அவனை அவன் அவனோடு சேர்த்துக் கொள்ளுகிறான் 

சிலரோ இறைவா என்னைப்போல் ஏராளமான் 
பக்தர்கள் உன்னை தேடிகொண்டிருக்கிரார்கள் 
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிறார்கள். 
அவர்களுக்கு நான் உதவ வேண்டும் என்கிறார்கள்
சரி என்கின்றான் இறைவன். 

அது போன்ற கருணையுள்ளம் கொண்ட புனிதர்களால்தான்
இன்று இறைஞானம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. 

அதற்க்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.



2 comments:

  1. இறைவனுக்கு நன்றி சொல்வோம்.. !!!

    ReplyDelete