Friday, August 16, 2013

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (தமிழாக்கம்-பகுதி-2)(101)

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (தமிழாக்கம்-பகுதி-2)(101)


ஸ்ரீ தியாகராஜ 
சுவாமிகளின் சிந்தனைகள் (101)

மானச பூஜை 

இரகுநாதனே  ! என்னை பரிபாலித்தருள் 






கீர்த்தனை (515)-பரிபாலய பரிபாலய பரிபாலய -இரகுநாத
ராகம்-ரீதிகௌளதாளம்-ஆதி


இரகுநாதனே  !
என்னை பரிபாலித்தருள்

எனது தேகமே
உனக்குத் தகுந்த கோயிலாகும்

உறுதிகொண்ட என் மனமே
நீ அமரும் பொற்பீடம் 

உன் பொன்னடி  தியானமே
வானுலக கங்கையின் புனித தீர்த்தம்

யானையைக் காத்தவனே !
என் அபிமானமே உனக்குச்
சுபமான நல்லாடை

உன் புகழைப் பாடும் எனது வாக்கே
நறுமணம் கமழும் வாசனைப் பொருள்

நான் புரியும் ஹரிநாம
ஸ்மரணங்களே நன்மலர்கள்

முன்பு நான் செய்த தீவினையின்
பயனே (நான் எரிக்கும் சாம்பிராணி தூபம்)

உன் திருவடியின் மீது நான் பூண்ட பக்தியே
உனக்கு அனவரதமும் ஒளி காட்டும் விளக்கு

நான் செய்துவரும் பூசையின் பலனே
உனக்கு சிறந்த நைவேத்தியம்

நான் கணந்தோறும் உன்னை தரிசிப்பதே
உனக்கு அகண்ட தீபாராதனை

நிரந்தரமாக எனக்கு ஏற்படும் ஆத்மானந்தமே
உனக்கு தாம்பூலம்

இவை அனைத்தும் தியாக ராஜன்
உனக்கு இயற்கையாக செய்யும்
 பூஜையின் நியமமாகும்.

மிக அருமையான பொருள் பொதிந்த கீர்த்தனை.
இந்த கீர்த்தனையை பாலமுரளி கிருஷ்ணா 
அவர்கள் பாடி கேட்க வேண்டும். 

புறத்தே வழிபாடு செய்ய
பல பொருட்களை
தேடவேண்டும். பல நியமங்களை
கடைபிடிக்கவேண்டும்
பல இடையூறுகள் ஏற்ப்படும் .
ஆனால் அகத்தே வழிபாடு
செய்வது மிகவும் எளிது
அதிக பலனை தரக்கூடியது.

வழிபாடு புறத்தே தொடங்கி
அகத்தில் உறைந்துள்ள
இறைவனை அடையும் மார்க்கத்தை
இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள்
தெளிவாக காட்டியிருக்கிறார்.

5 comments:

  1. கீர்த்திவாய்ந்த கீர்த்தனைகள் யாவும் அருமையோ அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வழிபாட்டில் இரண்டு உண்டு
      புலன்களால் செய்யப்படும் புற வழிபாடு
      அதற்க்கு முயற்சி எடுக்கவேண்டும். பல் பூஜை பொருட்களைச் சேர்க்க ,பூஜை செய்ய
      அதில் பல இடையூறுகள் உண்டு.
      புலன்கள் ஒத்துழைக்கவேண்டும், மனம் ஒத்துழைக்க வேண்டும். பல நேரங்களில் கைகள் பூஜை செய்துகொண்டிருக்கும். மற்ற புலன்கள் எங்கேயாவது அலைந்து கொண்டிருக்கும்.

      மற்றொன்று அகவழிபாடு
      அதற்க்கு ஒன்றும் தேவையில்லை
      மனம் ஒன்றினால் போதும். அவ்வளவுதான்
      நாம் எவ்வளவு வேண்டுமானாலும் இறைவனுக்கு நம்முடைய விருப்பம் போல் பூஜை செய்யலாம்.
      எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

      இது ஸ்வாமிகள் இயற்றியுள்ள மானச பூஜா துதியாகக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் இராமபிரானை நினைத்து வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

      பூஜைக்கு இடையூறாக நம் மனதில் உள்ள தீய வினைகளையே எரித்து தூபம் போடுவதாக தியாகராஜர் இந்த கீர்த்தனையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
      பகவான் புறவழிபாடுகளுக்கும், அக வழிபாடுகளுக்கும் வேறுபாடு பார்ப்பதில்லை.

      ஒருமையுடன் அவன் மலரடி நினைக்கின்றவர்களைதான் அவன் நாடி வருகிறான்
      தேடி வருகிறான் ஆடி வருகிறான்,பாடி வருகிறான்.
      என்பதே உண்மை.

      Delete
  2. ஆகா, எவ்வளவு அழகான பதிவு. ஸ்ரீராமரின் தாமரைப் பாதங்களின் மீதான் உங்கள் அன்பு தெளிவாகத் தெரிகிறது. இரகு நாதா! கரியைக் காத்தோனே!
    காப்பாய்
    1. இவ்வுடலே உனக்குகந்த இருப்பிடமாகுமய்யா;
    2. திடச் சித்தமே உயர் பொற்றிருக்கையாகும்;
    3. தூய திருவடித் தியானமே கங்கை நீராகுமய்யா;
    4. (எனது) அபிமானமே உயர் ஆடைகளாம்;
    5. மேன்மையான புகழுரைத்தலே மணக்கும் சந்தனமாம்;
    6. அரி நாமங்களை நினைவு கூர்தலே மலர்களாகுமய்யா;
    7. முன் தீவினைப்பயன்கள் யாவும் குங்குலியத் தூபமாக (புகையும்);
    8. உனது திருவடிப் பற்றே தூண்டா விளக்காகும்;
    9. நான் செய்யும் நல்வழிபாட்டுப் பயனே படையலாகும்;
    11. இடைவிடா தென்னிடம் உண்டாகும் சுகமே வீடிகை யாகுமய்யா;
    10. உன்னைக் காண்டலே சிறந்த விளக்காலாத்தியாகுமய்யா;
    12. விதிகள் தியாகராசன் தான் கைக்கொண்டவை.

    ReplyDelete
  3. இறைவனுக்கும், விருந்தினருக்கும் செய்யப்படும் பதினாறு விருந்தோம்பல் (உபசாரங்கள்) முறைகளில் சிலவற்றினை தியாகராஜர் இப்பாடலில் விவரித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. இது ஸ்வாமிகள் இயற்றியுள்ள மானச பூஜா துதி
      எப்போது வேண்டுமானாலும் இராமபிரானை நினைத்து வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

      Delete