Friday, January 24, 2014

பகவான் ரமணரின் தத்துவம்


 பகவான் ரமணரின் தத்துவம் 




விளக்கு நின்று நிதானித்து
அசையாமல் எரிந்தால்தான்
ஒளி  கிடைக்கும்.

அதற்கு காற்று வீசாமல்
இருக்கவேண்டும்

மனம் ஒருமைப்பட்டால்தான்
இறைவனை உணரமுடியும்.

ஜோதியாய் இதயத்தில்
ஒளி  வீசிக்கொண்டிருக்கும்
அவனைக் கண்டு ஆனந்தமடைய முடியும்

மனம் ஒருமைப் பட வேண்டுமென்றால்
மனதில் உள்ள எண்ணங்கள்
முறைப்படுத்தப்பட்டு இறைவனை
நோக்கி செலுத்தப்படவேண்டும்.

கண் விழித்தது முதல் புலன்கள் மூலம்
வெளியே சுற்றிக்கொண்டிருக்கும்
மனத்தை  உள்முகமாக திருப்பவேண்டும்.

எத்தனையோ
வழிமுறைகள் இருக்கின்றன.

அவைகளில் நமக்கு ஏற்றவை எது
என்பதை குரு மூலமாக அறிந்துகொண்டு
அதை  கடைபிடித்து முயற்சி செய்ய வேண்டும்.

ஒருநாள் இருநாள் அல்ல
இந்த உலகில் வாழும் காலம் வரை.

நாம் நினைத்த இலக்கை
அடையும் வரை.

அதற்க்கு மனதில் உறுதி வேண்டும்.
ஒழுக்கம் வேண்டும்
பக்தி வேண்டும். புலன் கட்டுப்பாடு வேண்டும்.
விடா முயற்சி வேண்டும்

தத்துவங்களை
புரிந்து கொள்ள வேண்டும்.

கிளிப்பிள்ளை போல்
ஓதுவதால் பயனொன்றுமில்லை.

ஏதாவது சத்சங்கத்தில்
இணைய வேண்டும்.

அப்போதுதான்
ஐயங்கள் அகலும்.
அறிவில் தெளிவு பிறக்கும்.

பகவான் ரமணரின்
தத்துவம் மிகவும் எளிதானது.

ஆனால் அதை உணரத்தான் நாம்
நம்மை தகுதியுடையவர்களாக
ஆக்கிக் கொள்ளவில்லை

அவரே 17 ஆண்டுகள் தன்னை
உணர்ந்துகொள்ள மனதை அழிக்க இடைவிடாது
முயன்றார் என்றால் எந்த வித முயற்சியும்
மேற்கொள்ளாமல் உலக சிந்தனைகளில்
மூழ்கி கிடக்கும் நாம் எவ்வளவு காலம்
முயற்சி இடைவிடாது செய்ய வேண்டும்
என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு கணம் கூட மனதின் கட்டுபாட்டை
விட்டுவிட்டால் கூட அது மீண்டும்
பழைய நிலையை விட மோசமான
நிலைக்கு போய்விடும் என்பதை
உணரவேண்டும்.

 மனமும் நம்முடைய பிராணனும்
ஒரே இடத்திலிருந்துதான் செயல்படுவதாக
 ரமணர் தெரிவிக்கிறார்.

ஏதாவது ஒன்றை நாம் வசப்படுத்தினால்
மற்றொன்றை வசப்படுத்திவிடலாம் என்கிறார்.

பிராணனை நாம் வசப்படுத்த முடியாது.
அதன் அருகே பயிற்சி பெற்றவர்களின்
துணையில்லாது நாம்  போனால்
நம்மை கொன்று விடும்.

மனதில் தோன்றும் ஒவ்வொரு
எண்ணங்களையும் விசாரி.

அது யாருக்கு, ஏன் உண்டாயிற்று என்று
பார்க்கச் சொல்லுகிறார். ரமணர்

இது ஆபத்தில்லாத வழி.
தொடர்ந்து அவர் அருளை நாடி
முயற்சி செய்தால் இந்த  பிறவியில்
இல்லாவிட்டாலும் ஒருநாள் அவர் கூறிய
அந்த உயர்ந்த நிலையை அடைவது
சாத்தியமட்டுமல்லாமல்
சத்தியமும் ஆகும்

1 comment:

  1. உண்மை தான்... ஒவ்வொரு எண்ணங்களையும் நமக்கு நாமே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete