Sunday, June 9, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள்(63)

தியாகராஜசுவாமிகளின் 
சிந்தனைகள்(63)

//வெறுமனே புத்தகத்தை படித்துவிட்டு 
அடுத்த பக்கத்திற்கு போவதால் 
ஒன்றும் பயனில்லை. //

சபாஷ்! ;)))))

மோகத்தின் மீது மட்டும்
தணியாத தாகமாக 
இருக்குமோ என்னவோ? ;))))) 

//உலகம் கண்கட்டு மாயை என்று
துணிந்தவனுக்கு பெண்டிர், பொருள் 
முதலியவற்றின் மீது மோகம் ஏது?//

அவ்வாறு துணியாத அப்பாவியான 
என்னைப் போன்றவர்களுக்கு, 
மோகத்தின் மீது மட்டும் தணியாத 
தாகமாக இருக்குமோ என்னவோ? ;)))))

திரு. vgk அவர்களின் கேள்வி மேலே 
அதன் மீது எழுந்த சிந்தனைகள் கீழே. 

மோகம் என்பது மனிதனை வீழ்த்தும்
இறைவன் படைத்த அஸ்திரங்களில்
நான்காவதாக இடம் பெறுகிறது.

முதலில் காமம் ஒரு பொருளின் மீது
ஆசை (எண்ணம்)) உண்டாகிறது .
ஆசை பிறந்தபின் ஆசையை நிறைவேற்ற ,
அல்லது நிறைவேற்றிக்கொள்ள
முனைப்பு உண்டாகிறது.

அதில் தடை இல்லை எனில்
ஆசை நிறைவேறிவிடுகிறது.
மனம் அடுத்த ஆசைக்கு
தயாராகிவிடுகிறது.

ஆனால் எந்த ஆசையும் அவ்வளவு
எளிதாக நிறைவேறுவது  கிடையாது.

அதற்கு பல தடைகள் ஏற்படுகின்றன
பலர் தடையாக இருக்கிறார்கள்.
சில நேரத்தில் இந்த உலகமே தடையாய் இருக்கிறது.
சில நேரங்களில் நாமே தடையாய் இருக்கின்றோம்.
முயற்சி இன்மை, ஆர்வகோளாறு, ஆர்வகுறைபாடு
என பல காரணங்கள்.

இந்நிலையில்தான் அடுத்த
அஸ்திரமான குரோதம் பிறக்கிறது.
அளவான கட்டுபாடான கோபம்
நன்மை செய்யும்.
கட்டுப்பாடற்ற கோபம்
அழிவை தருகிறது.

கோபத்தோடு லோபம் ,
என்னும் சுயநலமும் சேர்ந்துகொள்கிறது.
தனக்கு மட்டுதான் கிடைக்கவேண்டும்
மற்றவர்களுக்கு அதில் பங்கு கிடையாது.
என்ற தீய எண்ணமும் அதனுடன்
சேர்ந்துகொள்கிறது(கொல்கிறது)

தடைகள் ஏற்படுவதால்
ஆசை நிறைவேற தாமதம் ஏற்படுகிறது.
தாமதம் ஆக ஆக ஆசைப்பட்ட
பொருள் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது.
அதைதான் மோகம் என்கிறோம்.

 பல தடைகளை தாண்டி
ஆசை நிறைவேறினால்
அந்த மகிழ்ச்சியில் கர்வம் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் வேறொருவர்
 நம்மைவிட அதிக அளவில்
பயனடைந்தால் அவர்களிடம் மாத்சர்யம்
என்னும். பொறாமை ஏற்படுகிறது.

அது தீயை விட கொடியது.
தீயாவது அனைத்தையும்
பொசுக்கி சாம்பலாக்கிவிடும்.
ஆனால் இந்த பொறாமை தீ
பொசுக்கென்று பொசுக்கவும்  செய்யாது .
அழித்து சாம்பலாக்கவும் விடாது.
அப்படியே மேலும் கீழும்,நார்ப்புறமும்
தீ அனலினால் வருத்தும் தன்மையுடையுது.

அதனால்தான் கீதையில் கண்ணன்
பொருட்கள்மீது,உடலின்மீது
ஆசையை விட்டுவிடு





என்னையே பொருளாக கொண்டு
சரணடைந்துவிடு நான் உன்னை
னைத்து துன்பங்களிலும்
காப்பாற்றுகிறேன் என்றான்.

புத்தரும் அதையேதான் சொன்னார்.
ஆனால் யார் கேட்டார்கள் அவன் பேச்சை?

மூச்சு உள்ளவரை மூச்சு  பிடிக்க
முட்ட முட்ட தின்கிறார்கள்.
இப்படி தின்றுவளர்த்த இந்த உடம்பை
முடிவில் புழுக்களும் பூச்சிகளும்
நாயும் நரியும்,கழுகும் தின்று
பசியாறப்போகின்றன.

சிலர் கண்ணனை பற்றி கதை
விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல்லாயிரம் பேர் கதையை கேட்டு கொண்டே
 ஆயுள் முழுவதும் காலத்தை
வீணாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

யாரும் சாதனை செய்வது கிடையாது.
உண்மை பொருளை உணர எந்தவிதமான
 முயற்சிகளும் செய்வது கிடையாது.

அண்ட புளுகுகளை சில புராணங்களின்
துணையுடன் பலர் பரப்பிகொண்டிருக்கின்றனர்.
அதை நம்பி மக்கள் மோசம் போய்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆத்மாவும்
தனித்தனியாகதான் தேர்வு எழுதி
தேர்வு பெறவேண்டும். என்பதை
நினைவில் கொள்ளவேண்டும்.

pic.courtesy-google images

4 comments:

  1. //ஆனால் எந்த ஆசையும் அவ்வளவு எளிதாக நிறைவேறுவது கிடையாது.

    அதற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. பலர் தடையாக இருக்கிறார்கள். சில நேரத்தில் இந்த உலகமே தடையாய் இருக்கிறது. சில நேரங்களில் நாமே தடையாய் இருக்கின்றோம்.

    முயற்சி இன்மை, ஆர்வகோளாறு, ஆர்வகுறைபாடு
    என பல காரணங்கள்.//

    உண்மை, உண்மை, உண்மை. ;)

    //தின்றுவளர்த்த இந்த உடம்பை முடிவில் புழுக்களும் பூச்சிகளும் நாயும் நரியும்,கழுகும் தின்று பசியாறப்போகின்றன.//

    அடடா ..... அழுகப்போகும் உடல்களா ???? அச்சச்சோ!

    //ஒவ்வொரு ஆத்மாவும் தனித்தனியாகதான் தேர்வு எழுதி தேர்வு பெறவேண்டும். என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//

    மிகவும் அருமையான விளககங்கள், ஸ்வாமீ. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது. இருந்தாலும் ...... ;)))))

    ஆஸாபாசங்களுக்கு உட்பட்ட மானிடப்பிறவியல்லவா?

    அவ்வளவு எளிதில் தன்னை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆசாபாசங்கள் மனிதர்களுக்கு
      மட்டும்தான் என்பது இல்லை
      தெய்வங்களுக்கு கூட உண்டு.

      ஆனால் அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால்
      அவர்களும் மனித பிறவி எடுத்துதான்
      விடுதலை அடைய முடியும்.

      மாற்றி கொள்ள நிச்சயம் முடியும்
      வைராக்கியம் இருந்தால்.

      வெறும் வயிற்று பிழைப்பையே
      நினைத்து கொண்டிருந்தால்
      மீண்டும் ஏதாவது தாயின் வயிற்றிலோ
      மிருகங்களின் வயிற்றிலோ மல
      மூத்திரங்களிக்கிடையே வாசம் செய்து
      பிறந்து அல்லல்பட வேண்டும்.

      அது நமக்கு தேவையா?

      சிந்தித்து பாருங்கள்.

      Delete
    2. //மீண்டும் ஏதாவது தாயின் வயிற்றிலோ மிருகங்களின் வயிற்றிலோ
      பிறந்து அல்லல்பட வேண்டும்.

      அது நமக்கு தேவையா?

      சிந்தித்து பாருங்கள்.//

      சிந்தித்துப்பார்த்தேன், அண்ணா!

      ஐம்புலங்களால். நான் சிலவற்றில் ருசி கண்டுவிட்டேன்.

      மலையளவு துன்பமயமான இந்த வாழ்க்கையில், கடுகளவு சந்தோஷத்தையும் வைத்துள்ளான் அந்த இறைவன், என்பதை நன்கு உணர்ந்து கொண்டு விட்டேன்.

      நல்ல நெய் தாராளமாக ஒழுக,
      நிறைய வறுத்த முந்திரிகள் மிதக்க,
      ஏலக்காய் வாசனை மூக்கைத் துளைக்க,
      மிகவும் ருசியோ ருசியான
      சூடான சர்க்கரைப்பொங்கல் அல்லது
      அக்கார அடிசல்,

      சுவையான சூடான பஜ்ஜி + கெட்டிச் சட்னி,

      நல்ல மணத்துடன் கூடிய ஸ்ட்ராங் காஃபி,

      மல்லிகை போன்ற அதிக வாசனையுள்ள மணம் கமழும் புஷ்ப ஜோடனைகளுடன் கூடிய, மனதை மயக்கும் மஞ்சம்,

      அதிலே நான் தஞ்சம் எனப்பழகிவிட்டதனாலும்,

      இது போன்ற சுகத்தையெல்லாம் நேரிலோ, கற்பனையிலோ சந்தித்ததனாலும் ..........

      ”சந்தித்த வேளையில் ..... சிந்திக்கவே இல்லை ..... தந்துவிட்டேன் ....... என்னை”

      என்று பாட்டுப்பாடத்தோன்றுகிறதே தவிர, பகவன் நாமா சொல்லத் தோன்றுவது இல்லை. !!!!!!! ;))))))

      தங்களைப்போன்ற பெரியவர்கள், அடிமேல் அடி வைத்து, இதுபோன்ற நல்ல பல கருத்துக்களைச்சொல்லும் போது மட்டுமே, என் போன்ற சாதாரண, மிகச்சாதாரண மானுடர்களின் மனம் ஓர் நிமிடம், ஒரே ஒரு நிமிடம் ...... சிந்திக்கிறது.

      பிறகு மனம் என்ற குரங்கு மீண்டும் இங்குமங்கும் தாவவே செய்கிறது!

      என் செய்வேன் ! ராமா!!

      Delete
    3. உங்கள் மனம் என்னும் குரங்கை
      திருச்சிகோட்டை அனுமாரிடம்
      அழைத்துக்கொண்டு போங்கள்.

      அவர் அதற்கு தக்க
      போதனை செய்து ராம நாமம்
      சொல்ல ஏற்பாடு செய்வார்

      உங்களை விட மோசமான
      பெண்பித்து பிடித்தலைந்த
      ஒருவரையே துளசிதாசராக மாற்றி
      உலகம் போற்றும் ராமசரித்ரமானஸ்
      என்னும் ராமாயணத்தையே இந்தி
      மொழியில் எழுத வைத்துள்ளார்.

      நீங்கள் வெறும் சாப்பாடு ராமன்தான்
      உங்களுக்கு வைத்தியம்
      பார்ப்பது மிக எளிது.

      எனவே மனம் தளராதீர்கள்.
      இன்றே அவரை போய் பாருங்கள்

      Delete